மருத்துவ ஞானம். நோயாளிகளின் நோய்களை குணப்படுத்துவது தாங்கள் அல்ல என்பதையும், சிகிச்சை பெறுவோரின் உடலில் கலக்கும் பிரபஞ்ச ஆற்றல்தான் அவர்களின் நோய்களையும், வேதனைகளையும், துன்பங்களையும் நீக்க துணைப் புரிகிறது என்பதையும் ரெய்கி ஹீலர்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
ரெய்கி சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் மற்ற இயற்கையைச் சார்ந்த சிகிச்சையை அளிப்பவர்கள், நான்தான் சிகிச்சை அளிக்கிறேன், நான்தான் குணப்படுத்துகிறேன் என்ற எண்ணம் தோன்றிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். நான்தான் நோய்களை குணப்படுத்துகிறேன், துன்பங்களில் உதவுகிறேன் என்பன போன்ற எண்ணங்கள் உருவாக தொடங்கிவிட்டால் சிகிச்சை வெற்றி பெறும்போது ஆணவமும் கர்வமும் உண்டாகிவிடும்; சிகிச்சை பலனளிக்காமல் போகும்போது தாழ்வு மனப்பான்மையும் அவநம்பிக்கையும் உண்டாகிவிடும்.
நடப்பன அனைத்தும் அவன் செயல், அவன் அருளாலே, அவன் உதவியைக் கொண்டு நான் என் முயற்சியை செய்கிறேன். முடிவை இறைவன் கையில் ஒப்படைக்கிறேன் என்று நல்லதோ கெட்டதோ அனைத்தையும் இறைவன் மீது சாத்தி விட வேண்டும். நான்தான் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் செய்தால், முயற்சிகள் வெற்றி பெறாமல் போகலாம், மேலும் மற்றவர்களின் கர்மாக்களையும் நாம் சுமக்க நேரிடலாம்.