எங்கும் நிறைந்திருக்கும் பேராற்றல்

  • Home
  • எங்கும் நிறைந்திருக்கும் பேராற்றல்
எங்கும் நிறைந்திருக்கும் பேராற்றல்

எங்கும் நிறைந்திருக்கும் பேராற்றல் (Energy). ஆற்றல், யாராலும் காணமுடியாத ஆனால் அனைவராலும் உணரக்கூடிய ஒரு இயக்க சக்தியாகும். நம் கண்களால் காணக்கூடிய அத்தனை உயிரினங்களும், அத்தனை படைப்புகளும், அத்தனை பொருட்களும்; இயற்கையில் விளைந்திருக்கும், கடல், ஆறு, மலை, நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு, மற்றும் நம் கண்களால் காண முடியாத, உணர்வுகளாலும் உணர முடியாத, அத்தனை கோடி படைப்புகளும் ஒரே ஆற்றலில் இருந்து உருவானவைதான்.

“அனைத்துமே ஆற்றல்தான், அதுவே அனைத்துமாக இருக்கிறது. அது உங்கள் தேடலின் அலைகளை இணைக்கிறது. உங்களால் அதை மாற்ற முடியாது, மாற்றுவதற்கு வழிகளும் கிடையாது. அதன் மூலமாக தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். இது ஒரு தத்துவமில்லை, இது இயற்பியல் ஆகும்”

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

இந்த பிரபஞ்சப் பேராற்றல் உலகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. பிராணன், ரெய்கி, கீ, சீ, பிரபஞ்சச் சக்தி, வைட்டல் எனெர்ஜி, இறையாற்றல், குட்ரத், என ஒவ்வொரு மொழியிலும், சமுதாயத்திலும், நம்பிக்கையிலும், வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றலைக் குறிக்கும் பல்வேறு பெயர்களைக் கண்டு அவை வெவ்வேறு ஆற்றல்களைக் குறிப்பதைப் போன்று தோன்றினாலும் அடிப்படையில் அவை அனைத்துமே ஒன்றுதான்.

இந்த ஆற்றலுக்கு அடிப்படையில் பல தன்மைகள் உள்ளன. உலகத்துக்கு அப்பால் வெளியில் இயங்கிக் கொண்டிருப்பது ஒரு வகையான ஆற்றல். இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருப்பதும், பராமரித்துக் கொண்டிருப்பதும் ஒரு வகையான ஆற்றல். உயிரினங்களை இயக்கிக் கொண்டிருப்பது ஒரு வகையான ஆற்றல். இயற்கையைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் ஒரு வகையான ஆற்றல். உயிரில்லாத ஜடப் பொருட்களில் இயங்கிக் கொண்டிருப்பது ஒரு வகையான ஆற்றல்.

வாகனங்களை இயக்குவது, மின்சாரச் சாதனங்களை இயக்குவது முதல் இந்த ஆற்றல், இந்த பிரபஞ்சத்தின் எல்லா நிலைகளிலும் செயல்புரிந்து கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் தோற்றம் முதலாக, ஒரு சிறு புல்லின் வளர்ச்சி வரையில். மழை பொழிவது முதல் சுனாமியை உருவாக்குவது வரையில் இந்த ஆற்றல் பல பரிமாணங்களை எடுக்கிறது.

“இந்த பிரபஞ்சத்தின் இரகசியங்களை அறிய வேண்டுமென்றால், ஆற்றல், அலைகள், மற்றும் அதிர்வுகளை ஆராயுங்கள்” – நிகோலா டெஸ்லா

ஒரே தண்ணீர், கடல், ஆறு, குட்டை, மழை, சாக்கடை, டீ, காபி, குளிர்பானம், என அதன் உபயோகத்துக்கும், தன்மைக்கும், ஏற்ப பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவதைப் போன்று; இந்த ஆற்றலும் அதன் தன்மைக்கும், உபயோகத்துக்கும், ஆற்றலுக்கும், ஏற்ப பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆனால் அடிப்படையில் அனைத்துமே ஒன்றுதான்.


(கிர்லியன் படக்கருவியைக் கொண்டு பதிவு செய்யப்பட்ட பொருட்களின் ஆற்றல்கள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping