அன்பும் கருணையும்.
ரெய்கியை பயிற்சி செய்யும் நபர்கள், மனிதன், விலங்கு, தாவரம் என்ற பேதம் கூட இல்லாமல் அனைத்து உயிர்களின் மீதும் அன்பு செலுத்த வேண்டும். இவர்கள் என் பெற்றோர்கள், இவர்கள் என் சகோதரச் சகோதரிகள், இவர்கள் என் உறவினர்கள், இவர்கள் என் நண்பர்கள், போன்ற எந்த ஒரு காரணமும் இன்றி அனைவர் மீதும் அன்பும், கருணையும், பொழியக்கூடிய நபராக இருக்க வேண்டும். அன்பின் வடிவமாக, அனைவரையும் நேசிக்க கூடிய மனிதராக, அனைவரின் மீதும் கருணையைப் பொழியக்கூடிய மனிதராக இருத்தல் வேண்டும்.
என் பெற்றோர்கள், என் சகோதரச் சகோதரிகள், என் உறவினர்கள், என் நண்பர்கள், என் மதத்தைச் சார்ந்தவர்கள், என் ஜாதியைச் சார்ந்தவர்கள், என் ஊரைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்துக்காக அன்பு செலுத்துவது ஒரு சாதாரணமான விசயம். இந்த உணர்வுகளுக்குப் பின்னால், தேவையும், பலனும், பாதுகாப்பு உணர்வும் இருக்கின்றன.
அதே நேரத்தில் நமக்கு எந்த வகையிலும் கைமாறு செய்ய முடியாத, பலகீனமான மனிதர்களின் மீதும், விலங்குகள், பறவைகள், தாவரங்களின், மீதும் நாம் காட்டும் கருணையும், பரிவும், பாசமும் தான் உண்மையான அன்பின் வடிவங்களாகும்.
1. அனைவர் மீதும் அன்பு செலுத்துங்கள்.
2. மனிதர்கள், விலங்குகள், மற்றும் தாவரங்களுடன் கருணையுடனும் பரிவுடனும் நடந்துக் கொள்ளுங்கள்.
3. இயற்கையிடம் நன்றியுணர்வுடன் நடந்துக் கொள்ளுங்கள்.
4. இறைவனிடம் விசுவாசமாக இருங்கள்.
இந்த உலகம் அன்பை அடிப்படையாக கொண்டுதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் பிற உயிர்களின் மீது அன்புடனும், கருணையுடனும், இருக்கும் போது. இயற்கையும் இறைவனும் உங்களின் மீது அன்புடனும் கருணையுடனும் இருப்பார்கள். இந்த உலகில் நீங்கள் எதை மற்றவர்களுக்கு கொடுக்கிறீர்களோ அதுதான் கைமாறாக உங்களுக்கும் கொடுக்கப்படும். நல்லதோ கெட்டதோ நீங்கள் கொடுக்கும் அத்தனையும் பல மடங்காக உங்களிடம் நிச்சயமாக ஒரு நாள் திரும்ப வரும்.